திருச்சிராப்பள்ளி: நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தலைமையில் திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதில், திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு பின்னர் எம்.பி. திருநாவுக்கரசர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறும்போது, “ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளன் பரோலில் சென்றதில் எவ்வித வருத்தமும் கிடையாது. ஆனால் நிரந்தர விடுதலை என்று வரும் போது, அது நீதிமன்றம் வாயிலாக தான் நடக்க வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் கருத்து. அதை தான் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் அழகிரி தெரிவித்துள்ளார். அவரது கருத்து தான் எனது கருத்தும். நீதிமன்றத் தீர்ப்பு தான் இறுதியானது. அதனால் நீதிமன்ற தீர்ப்பு படியே நடக்க வேண்டும்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “இன்று முதற்கட்டமாக 30 ஆயிரம் முகக்கவசங்கள் அரசு மருத்துவமனைகள், மாவட்ட நிர்வாகம் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் எத்தனைப் படுக்கை வசதிகள் உள்ளன. ஆக்ஸிஜன் வசதி எப்படி உள்ளது என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மருந்துகள் கிடைக்கிறதா என்பது குறித்தும் மருத்துவர்களுடனும், சுகாதார அலுவலர்களுடனும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களின் தேவைகள் குறித்தும் கருத்துக்கள் கேட்கப்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் திருச்சியில் புதிதாக தொடங்கி வைத்த கரோனா சிகிச்சை மையங்களுடன் சேர்த்து திருச்சியில் 2,500 படுக்கை வசதி உள்ளன. அதனால் திருச்சி மாவட்டத்தில் படுக்கைகள் பற்றாக்குறை என்பது கிடையாது. ஆக்ஸிஜன் பற்றாக்குறை தீவிரமாக இருந்தது. தற்போது அதுவும் குறைந்து வருகிறது. தனியார் மருத்துவமனைகளிலும், அரசு மருத்துவமனைகளிலும் ஆக்ஸிஜன் விநியோகம் ஓரளவுக்கு இருக்கிறது.
ஜூன் முதல் வாரத்தில் தொற்றுப் பரவல் கூடுதலாக வர வாய்ப்பு உள்ளது. கரோனா தொற்றின் 3ஆவது அலை வருவதற்கான வாய்ப்பும் உள்ளன; வராமல் இருந்தால் நல்லது. அதனால் அனைவரும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை முதலமைச்சர் எடுத்து வருகிறார். தமிழ்நாட்டில் மேலும் படுக்கைகளின் எண்ணிக்கையை உயர்த்த தமிழ்நாடு முதலமைச்சர் எடுத்துவரும் நடவடிக்கை பாராட்டுக்குரியது.
திருச்சியில் மூன்று இடங்களில் ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலை அமைக்க வேண்டும். திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனை, பொன்மலை ரயில்வே மருத்துவமனை, பெல் ஆகிய இடங்களில் ஆக்ஸிஜன் உற்பத்தி அலகுகளை நிறுவ வேண்டும். அதற்கான வாய்ப்புகள் உள்ளன. இவை அமைந்தால் தற்போதைய தேவையையும், எதிர்காலத்தில் மூன்றாவது அலை வந்தாலும் அதனைச் சமாளிக்க உதவியாக இருக்கும்.
மாவட்டத்தில் அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் உயிரை பணயம் வைத்து பணியாற்றுகின்றனர். பல மருத்துவர்கள், சுகாதார அலுவலர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் அவர்கள் சிறப்பான முறையில் பணியாற்றி வருவது பாராட்டுக்குரியது. தற்போது நகரங்களிலிருந்து கிராமப்புறங்களில் அதிகளவில் பரவுகிறது. அதனால் கிராமங்களில் வீடுவீடாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். பரிசோதனையில் ஆக்ஸிஜன் குறைவாக இருந்தால் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.