திருச்சி : அதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தில்லை நகரில் நடைபெற்றது. புறநகர் வடக்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு அவைத்தலைவர் பிரின்ஸ் தங்கவேல் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சரும், அதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளருமான பரஞ்ஜோதி பேசினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
சசிகலாவுடன் பேசினால் கட்சியிலிருந்து நீக்கம்
அப்போது , "சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடி கட்சியின் வளர்ச்சிக்கும், புகழுக்கும், இழுக்கு தேடியவர்கள் அனைவரையும் கட்சியிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கரோனா நோய்த்தொற்றால் இறந்தவர்களின் இறப்பு சான்றிதழில் உண்மையான காரணத்தைக் குறிப்பிட வேண்டும். கரோனா, கறுப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய மருந்துகள் உடனுக்குடன் வழங்கி விரைவில் குணமடைய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜெயலலிதா கல்வெட்டு
ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி அந்தநல்லூர் வடக்கு ஒன்றியம் பெட்டவாய்த்தலை பலகாவேரி கிராமத்தில் 2011ஆம் ஆண்டு நிறுவப்பட்ட மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் கல்வெட்டை இடித்த மர்ம நபர்கள் மீது காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.