திருச்சி: வயலூர் முத்துக்குமார சுவாமி கோயிலில், முருகன் பிரதான தெய்வம். ஆதிநாதர் – ஆதிநாயகி பொய்யாக் கணபதி சன்னதிகளும் உள்ளன. தமிழ்நாடுஅரசின், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற உத்தரவுப்படி, பிராமணர் அல்லாத ஜெயபாலன், பிரபு ஆகியோர் இந்து அறநிலையதுறை சார்பில் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டனர்.
கோயில் சன்னதிகளில், ஏற்கனவே 5 அர்ச்சகர்கள் பணியில் இருந்த நிலையில், புதிதாக நியமிக்கப்பட்ட இருவரும் நேற்று (ஏப்.19) கோயிலில் பணியில் அமர்த்தப்பட்டனர். அவர்கள், முருகன் சன்னதிக்கு சென்று, தமிழில் அர்ச்சனை செய்தனர். முருகன் சன்னதியில் வழிபாடு நடத்திய மக்கள் அதிகாரம் அமைப்பினர் மற்றும் சமூகநீதிப் பேரவையினரும், ‘தமிழ் வாழ்க, தமிழ் கடவுள் முருகனுக்கு அரோகரா’ என்று கோஷமிட்டனர்.
பரம்பரையாக பணி செய்து வரும் சிவாச்சாரியார்கள், அதற்கு ஆட்சேபணை தெரிவித்ததோடு, கோயில் அலுவலகம் முன், தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். அவர்களுக்கு ஆதரவாக, இந்து அமைப்பினரும் அங்கு வந்தனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த அறநிலையத் துறை இணை ஆணையர் செல்வராஜ், உதவி ஆணையர் மோகனசுந்தரம் மற்றும் அலுவலர்கள் கோவிலுக்கு வந்து, இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அரசின் உத்தரவுப்படி ஜெயபாலன், பிரபு ஆகியோர் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
ஏற்கனவே, பணியில் இருக்கும் அர்ச்சகர்களின் பணியை, புதிதாக நியமிக்கப்பட்டவர்களுக்கும் சுழற்சி முறையில் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. தர்ணா போராட்டத்தில் நடத்திய சிவாச்சாரியார்கள், ஆகம விதிப்படி வழிபாடு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த சம்பவத்தால், ஜீயபுரம் டி.எஸ்.பி., செந்தில்குமார் தலைமையில், வயலுார் கோயிலில், காவல் துறையினர் குவிக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: ஆளுநரை பணி செய்யவிடாமல் தடுக்கும் நோக்கில் கொடிகளை வீசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரி புகார்