திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே வ.உ.சி. சாலையில் மறைந்த பேரரசர் பெரும்பிடுகு முத்தரையருக்கு சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்பட உள்ளது. மேலும், அதே பகுதியில் பி.டி. பன்னீர்செல்வத்தின் சிலையுடன் கூடிய மணிமண்டபமும், எம். கே. தியாகராஜ பாகவதர் சிலையுடன் கூடிய மணிமண்டபமும் அமைக்கப்படவுள்ளன.
இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் ஏற்கனவே அறிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து மத்திய பேருந்து நிலையம் வ.உ.சி. சாலையில் உள்ள இடத்தை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு சில மாதங்களுக்கு முன்பு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிலையில், இன்று இந்த மணிமண்டபம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார். சென்னையில் நடந்த இவ்விழாவில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருச்சி ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இதற்கென்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரத்தியேக காணொலி காட்சி நிகழ்வில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, சமுதாய அமைப்பின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: மீண்டும் பொதுமுடக்கம்: மீளுமா தமிழ்நாட்டின் தலைநகர்