சென்னை: தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர் சங்கம் சார்பில் தீபாவளி பண்டிகைக்கு 30 சதவீத போனஸ் வழங்க வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
30 சதவீத தீபாவளி போனஸ்
தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர் சங்கம் சார்பில் ஒருங்கிணைந்த பெரம்பலூர் மற்றும் அரியலூர் டாஸ்மாக் பணியாளர்கள் அனைத்து கூட்டமைப்பு சார்பாக தீபாவளி பண்டிகைக்கு 30 சதவீத போனஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, பணி நிரந்தரம் செய்ய வேண்டும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், தொழிலாளர் நலன் கருதி விற்பனை நேரத்தை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் உள்ள டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பு டாஸ்மாக் விற்பனையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மாக் விற்பனையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்ட தமிழ்நாடு டாஸ்மார்க் அனைத்து தொழிற்சங்க கூட்டுக் குழு சார்பில் 14 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
செண்பகராமன்புதூர் உள்ள தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் மாவட்ட டாஸ்மாக் தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் முன்பு தமிழ்நாடு டாஸ்மார்க் அனைத்து தொழிற்சங்க கூட்டுக் குழு சார்பில் 14 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இது குறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், “உயிர்கொல்லி நோயான காரோனா பரவல் காலத்திலும் டாஸ்மாக் பணியாளர்கள் தங்கள் உயிரையும் மதிக்காமல் பணியாற்றினர். அவர்களுக்கு எந்தவித பணி பாதுகாப்பும் வழங்கப்படவில்லை.
சேலம்
17 ஆண்டுகளாக டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரமாக்க வேண்டும் என்று வலியுறுத்தி சேலம் மாவட்ட டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் இன்று (நவ.6) கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் சேலத்தில் நடைபெற்றது.
சேலம் அடுத்த சந்தியூர் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சேலம் மாவட்ட டாஸ்மாக் பணியாளர்கள் சங்க தலைவர் முத்து தலைமை வகித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட டாஸ்மாக் பணியாளர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது, “ஒப்பந்த டாஸ்மாக் பணியாளர்களின் நிரந்தரப்படுத்த வேண்டும் தீபாவளி போனஸ் 30% வழங்க வேண்டும், டாஸ்மாக் கடைகளில் பல்வேறு துறை சார்ந்தவர்கள் ஆய்வு செய்வதே கட்டுப்படுத்திட வேண்டும், தொழிலாளர் நலன் கருதி விற்பனை நேரத்தை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதனால் தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மொத்த விற்பனை கிடங்கு பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
போராட்டம் அறிவிப்பு
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சேலம் மாவட்ட டாஸ்மாக் பணியாளர்கள் சங்க தலைவர் முத்து கூறுகையில்," தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் நிரந்தரமாக தொடக்க இருப்பு பணம் ரூபாய் 10,000 வழங்கிட வேண்டும், தொழிலாளர்களுக்கும் முழு பலன் தரக்கூடிய இசை நலத் திட்டங்களை முழுமையாக அமல்படுத்த வேண்டும்.
அபராத தொகை ஜிஎஸ்டி வரி ஆகியவற்றில் வசூல் செய்வதை உடனே நிறுத்தவேண்டும், வைரஸ் நோய் தொற்று பரவும் காரணத்தினால் தொழிலாளர்களின் பாதுகாப்பு நலன் கருதி மருத்துவ உபகரணங்களை டாஸ்மாக் பணியாளர்களுக்கு வழங்கிட வேண்டும், மற்றவர்களுக்கு மருத்துவ செலவுகள் முழுமையையும் அரசு ஏற்று அந்த தொகையை வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வரும் 26-ஆம் தேதி மாநிலம் தழுவிய அளவில் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும்” என்றார்.
ஈரோடு
கடந்தாண்டு வழங்கிய 20 சதவீத போனஸ் தொகையை இந்த ஆண்டும் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு மாவட்ட டாஸ்மாக் தொழிற்சங்கத்தினர் வீரப்பன்சத்திரம் பகுதியில் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், கடந்தாண்டு வழங்கப்பட்ட 20 சதவீத போனஸ் தொகையை இந்த ஆண்டும் வழங்கிட வேண்டும் என்றும் தொற்றுநோய் பரவலை தடுப்பதற்கான தடுப்பு மருந்தில்லாததால் கடைகளின் விற்பனை நேரத்தை 12 மணி முதல் 10 மணி வரை என்பதை மாற்றி காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை என்பதாக அறிவித்திட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதையும் படிங்க: டாஸ்மாக் ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸ்!