திருச்சிராப்பள்ளி: 20 மாவட்டங்களைச் சேர்ந்த 118 தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு, சாரநாதன் பொறியியல் கல்லூரியில் வைத்து 4 நாட்களாகச் சிறப்புப் பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சியின் நிறைவு நாளான இன்று (ஜன.30) தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு கலந்து கொண்டு பயிற்சி பெற்ற தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.
இந்நிகழ்ச்சி நிறைவில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சத்தியபிரதா சாகு, “கரோனா காரணமாகக் கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைக்க உள்ளதால், கூடுதலாக ஊழியர்கள் தேர்தல் பணிக்காகப் பயன்படுத்தப் படுவார்கள். தேர்தல் பணிக்கு கூடுதலாக அரசு அலுவலர்கள், மாநில மற்றும் மத்திய அரசு ஊழியர்கள் இந்த முறை பயன்படுத்த வாய்ப்புகள் உள்ளது. இதற்கான பட்டியல் தயார் செய்யப்படும்.
தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே கட்சிகள் பரப்புகள் மேற்கொள்ளத் தடையில்லை. உரிய விதிமுறைகளைப் பின்பற்றி பரப்புரை செய்யலாம். தற்போது நடைபெற்று வரும் பரப்புரை குறித்து சில புகார்கள் வந்துள்ளன. இது குறித்து ஆணையத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மே 24ஆம் தேதியுடன் தற்போதைய ஆட்சியின் காலம் முடிகிறது. தேர்தல் ஆணையம் அதற்குள் தேர்தல் தேதியை அறிவிக்கும். தேர்தலை ஒரே கட்டமாகத் தமிழ்நாட்டில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்ய வேண்டும். மார்ச் மாதத்தில் தேர்தல் வர வாய்ப்பு இருக்கிறது என்பது போன்ற தகவல் ஏதும் இல்லை.
வாக்குச்சீட்டு முறையைக் கொண்டு வர வேண்டும் என்று பலர் கோரிக்கை வைத்து வருகிறார்கள். இது குறித்தும் தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்ய வேண்டும். தற்போதைய சூழலில் வாக்குப்பதிவு இயந்திரத்தின் மூலம் தான் தேர்தல் நடைபெறும்.
26 மாவட்டங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல் நிலை சரிபார்ப்பு பணி நிறைவு பெற்றுள்ளது. பிப்ரவரி 5ஆம் தேதிக்குள் அனைத்து மாவட்டங்களிலும் இந்த பணி நிறைவுபெறும்” என்று கூறினார்.