தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அதில், 'உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம் தன்னதிகாரமுள்ள அமைப்பாக இருந்து வந்தது. மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர் பங்கீட்டை கண்காணிக்கக் கூடிய அதிகாரமிக்க அமைப்பாகும்.
இந்நிலையில் கடந்த 24ஆம் தேதி, காவிரி மேலாண்மை ஆணைய செயல்பாடுகள், மத்திய அரசின் ஜல்சக்தி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் அமைப்பாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் விவசாய சங்கப் பிரதிநிதிகளையும் கலந்து ஆலோசிக்காமல் எடுத்துள்ள இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.
அதனால், இந்தக் கோரிக்கை மனுவை தமிழ்நாடு முதலமைச்சருக்கும், பிரதமருக்கும் அனுப்பி, தீர்வு காண மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தவேண்டும்' என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அப்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், தமிழ்த் தேசியபேரியக்கம், இந்திய மஜலிஸ் கட்சி, மக்கள் அதிகாரம் உள்ளிட்ட 13 அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் விவசாய சங்கத்தினருடன் வந்திருந்தனர்.
இதையும் படிங்க: