திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி பகுதியில் இரண்டு வயது குழந்தை சுர்ஜித், தனது வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்தபோது, 30 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான். இரவு முழுவதும் குழந்தையை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மதுரை மணிகண்டனின் பிரத்யேகக் கருவி மூலம் நடைபெற்றுவந்த மீட்புப் பணி தோல்வியடைந்த நிலையில், ஐஐடி குழுவினரின் நவீன கருவியை கொண்டு மீட்புப் பணி நடைபெற்றது. இந்நிலையில் கிணற்றில் விழுந்தபோது, 30 அடியில் இருந்த குழந்தை, மீட்புப் பணியின்போது 68 அடிக்கும் கீழே சென்றுவிட்டதால் ஐஐடி குழுவினரின் மீட்புப் பணியும் தோல்வியை கண்டது.
அதைத்தொடர்ந்து புதுக்கோட்டையைச் சேர்ந்த வீரமணி குழுவினர், தாங்கள் வடிவமைத்த கருவியின் மூலம் குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கருவியானது காற்றழுத்தத்தை முழுவதுமாக ஆழ்துளை கிணற்றுக்குள் செலுத்தி குழந்தையை உறிஞ்சி மீட்கும் தன்மையுடையது.
இதற்கிடையில், சம்பவ இடத்திற்கு அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் வருகை தந்துள்ளனர். தற்போது குழந்தையை மீட்க தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் வருகை தர இருக்கிறார்கள் எனவும் அவர்கள் காலை 6:30க்குள் சம்பவ இடத்திற்கு வந்து விடுவார்கள் எனவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.