திமுக தலைவர் கருணாநிதியின் மகன் என்ற அடையாளத்தோடு ஸ்டாலின் அரசியலுக்கு அறிமுகமானாலும் அவர் அடிமட்ட தொண்டராகவே தனது பணியை தொடங்கினார். இதனையடுத்து திமுகவின் இளைஞரணி செயலாளராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டபோது அவரின் இரு கைகளில் ஒரு கையாக இருந்தவர் திமுக முன்னாள் எம்.எல்.ஏ அன்பில் பொய்யாமொழி.
இளைஞரணி உருவாக்கப்பட்டு ஸ்டாலின் கைகளில் அந்த அமைப்பு கொடுக்கப்பட்டாலும் அவரது கைகளுக்கு பளு சேர்க்காமல் பகிர்ந்துகொண்டவர்களில் பொய்யாமொழிக்கு முதல் இடம் உண்டு. கருணாநிதியின் நெருங்கிய நண்பரான தர்மலிங்கத்தின் மகன், ஸ்டாலினின் நெருங்கிய நண்பர், எம்.எல்.ஏ என தன்னிடம் ஏகப்பட்ட செல்வாக்கை அவர் வைத்திருந்தாலும் திருச்சி மாவட்ட திமுக செயலாளர் பதவி காலியாக இருந்தபோது அதற்கு போட்டி போடாமல் நேருவுக்கு விட்டுக்கொடுத்து, தான் ஒரு பதவி ஆசை இல்லாத உடன்பிறப்பு என்பதை அறிவாலயத்திற்கும், கோபாலபுரத்திற்கும் நிரூபித்துக்கொண்டே இருந்தவர் அன்பில் பொய்யாமொழி.
இந்நிலையில், அவரது 20ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதனையொட்டி பொய்யாமொழியின் நெருங்கிய நண்பரும், திமுக தலைவருமான ஸ்டாலின் அன்பிலார் வீட்டில் இன்று மரியாதை செலுத்தினார்.
இதற்கிடையே, கருணாநிதியின் மறைவுக்கு பிறகு திமுகவின் தலைவராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டதும் இதே ஆகஸ்ட் 28ஆம் தேதிதான். கடந்த வருடம் தனது நெருங்கிய நண்பரான பொய்யாமொழிக்கு மரியாதை செலுத்தியபிறகே திமுக தலைவராக ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார் என்பதே அவர்கள் இருவருக்குமிடையே இருந்த நட்பை எடுத்துரைக்கும்.
குறிப்பாக, அண்ணா மறைவுக்குப் பிறகு திமுக தலைவராக கருணாநிதி வருவதற்கு காரணமாக இருந்தவர்களில் முக்கியமானவர் அன்பில் தர்மலிங்கம். அதேபோல், திமுக இளைஞரணிச் செயலாளராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டபோது அவரோடு நின்றவர் அன்பில் பொய்யாமொழி.
தற்போது, அக்கட்சியின் இளைஞரணி செயலாளராக உதயநிதி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் பொய்யாமொழியின் மகனும் உதயநிதியின் நெருங்கிய நண்பரும், எம்.எல்.ஏவுமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி. இப்படி கோபாலபுரத்திற்கும், கிராப்பட்டிக்கும் மூன்று தலைமுறைகளாக நட்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.