திருச்சி மாவட்டம் துறையூர் அருகேயுள்ள உப்பிலியாபுரம் தளுகைபாதர் பேட்டையில், மின்வேலி அமைத்து வன விலங்குகளை வேட்டையாடுவதாக வனத் துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட வன அலுவலர் சுஜாதா உத்தரவின் பேரில், வனத் துறை அலுவலர்கள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அந்தப் பகுதியைச் சேர்ந்த ரவி (50) என்பவர் கொல்லமிலை பகுதியில் மின்வேலி அமைத்து விலங்குகளை வேட்டையாடியது கண்டுபிடிக்கப்பட்டது. சம்பவத்தன்று அவரது மின்வேலியில் காட்டுப்பன்றி ஒன்று சிக்கியுள்ளது. இதை ரவி தலைமையிலான ஆறு பேர் கொண்ட கும்பல், விஜயகுமார் என்பரின் கறிக் கடையில் சமைத்துள்ளனர்.
அப்போது அங்கு சென்ற வனத் துறையினர் அனைவரையும் கையும் களவுமாக பிடித்து, பன்றி இறைச்சியை பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக பாதர்பேட்டையைச் சேர்ந்த ரவி (50), பரமன் (53), பாலமுருகன் (36), சிலம்பரசன் (32), சுப்பிரமணி (31), விஜயகுமார் (43) ஆகிய ஆறு பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிறுத்திய பின் சிறையில் அடைத்தனர்.