திருச்சி திருவானைக்காவலில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்றன. கட்டுமான பணிகள் முடிவடைந்து சமீபத்தில் மேம்பாலம் பொது போக்குவரத்துக்குத் திறந்துவிடப்பட்டது. இந்நிலையில் மேம்பாலத்திற்கான அணுகுசாலை பணிகள் நிறைவடையாமல் இருந்தன.
அணுகுசாலை விரிவாக்கத்திற்காக அங்குள்ள பள்ளிவாசல் ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி, கடந்த இரண்டு ஆண்டுகளாக நெடுஞ்சாலைத் துறை சார்பில் முறையாக நோட்டீஸ் அனுப்பப்பட்டும், ஆக்கிரமிப்புகள் அகற்றிக்கொள்ளப்படாத நிலையில், நீதிமன்ற உத்தரவைப் பெற்று நெடுஞ்சாலைத் துறையினர், இன்று (அக். 12) 2.5 மீட்டர் வரை ஆக்கிரமிப்பில் இருந்த பகுதியை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத் துறையினர் ஈடுபட்டனர்.
இதற்குப் பள்ளிவாசல் பகுதியில் உள்ளவர்கள், தாங்கள் நீதிமன்ற தடை வாங்கி வைத்துள்ளதாகவும், இடிக்கக் கூடாது என்றும் எதிர்ப்புத் தெரிவித்தனர். எதிர்ப்பையும் மீறி நெடுஞ்சாலைத் துறையினர் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இஸ்லாமியர்கள், திருவானைக்காவல் மேம்பாலம் பகுதியில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக இந்தப் போராட்டம் நீடித்தது.
தகவலறிந்த அங்கு வந்த வருவாய்த் துறை அலுவலர்கள், மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இந்தச் சாலை மறியலால் திருவானைக்காவல் மேம்பாலத்தில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்கள் : வேளாண் சட்டங்களுக்கு எதிராக இ.கம்யூனிஸ்ட் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்