திருச்சி மாவட்டம், லால்குடி அருகே நன்னிமங்கலத்தைச் சேர்ந்த ராமர் என்பவரின் மகன் ராஜிவ்காந்தி(45). இவர் பேரரசர் முத்தரையர் பேரவையின் மாநிலத் தலைவராக பதவி வகிக்கிறார். லால்குடி அருகே கீழன்பில் பகுதியில் ராஜிவ்காந்திக்கு சொந்தமான செங்கல் சூளை உள்ளது. இந்த செங்கல் சூளையில் அரியூர் கிராமத்தைச் சேர்ந்த நாகேந்திரன்(51) மற்றும் அவரது மகன்களான பிரசாத், சக்திவேல் என இரண்டு பேர் உட்பட மூவரும் வேலை செய்து வந்தனர்.
இந்த நிலையில், செங்கல் சூளை முதலாளியான ராஜிவ் காந்தியிடம், நாகேந்திரன் பணம் வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு, நாகேந்திரன் உடல்நிலை சரியில்லாத காரணத்தால், கடந்த சில நாட்களாக செங்கல் சூளைக்கு வேலைக்கு செல்லவில்லை. இதனால், நாகேந்திரனிடம் ஏன் வேலைக்கு வரவில்லை என ராஜிவ் காந்தி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, அது இருவருக்கும் இடையே கைகலப்பாக மாறியது. இதனால், ஆத்திரமடைந்த முதலாளி ராஜிவ் காந்தி, நாகேந்திரனைத் தாக்கியுள்ளார்.
தன் கண்முன்னே தந்தையை தாக்குவதைப் பார்த்து பொறுக்கமுடியாத அவரது மகன் பிரசாந்த் அதைத் தட்டிக்கேட்டதைத் தொடர்ந்து அவரும் தாக்குதலுக்கு உள்ளானார்.
இதனால், அவமானமடைந்த நாகேந்திரன் விஷம் குடித்தநிலையில் மீட்கப்பட்டு லால்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அதனைத்தொடர்ந்து, அங்கு சிகிச்சைப் பலனின்றி நாகேந்திரன் உயிரிழந்தார். இது தொடர்பாக லால்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகேந்திரன் தற்கொலைக்கு காரணமான ராஜிவ் காந்தியை வலைவீசித் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: பறையா என்ற வார்த்தையை பயன்படுத்திய அண்ணாமலை... வெடிக்கும் எதிர்ப்பு..