திருச்சி: மணப்பாறை ஆண்டவர்கோயில் பாலத்தின் கீழ் முட்புதரில் வீசப்பட்ட பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தை மீட்கப்பட்ட அடுத்து சில நிமிடத்தில் தாயும் அதேபகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளார். விசாரணையின் அடிப்படையில் பிறந்த குழந்தையை புதரில் வீசிய தாய் இனாம்ரெட்டியபட்டியைச் சேர்ந்த தர்மராஜ் மனைவி சசிகலா(38) என்பது தெரிய வந்துள்ளது.
இவருடைய கணவர் 8 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்ட நிலையில், தனது எட்டு வயது மகளுடன் சசிகலா அவரது சகோதரி வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆண் நண்பர் ஒருவருடன் வாழ்ந்து வந்ததனால் சசிகலா கருவுற்றுள்ளார். இதானால், இன்று (மே 27) இரவு சசிகலாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டு பிறந்த பெண் குழந்தையை இன்று காலையில் அப்பகுதியிலுள்ள ஆண்டவர்கோவில் பழையபாலத்தின் அருகில் வைத்து விட்டு சிறிது தூரம் சென்றதும் மயக்கம் அடைந்துள்ளார்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவ்வழியே சென்ற பொதுமக்கள் இருவரையும் மீட்டு மணப்பாறை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பச்சிளம் குழந்தைப் பிரிவில் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தாய் சசிகலா மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். இச்சம்பவம் குறித்து மணப்பாறை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கட்டைப்பையில் வைத்து குழந்தையை கடத்திய பெண் கைது