திருச்சி: பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் நம்பெருமாள் வசந்த உற்சவம் நேற்று (ஜூன்6) தொடங்கியது. இந்த உற்சவம் வரும் 14ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
வசந்த உற்சவத்தின் முதல் நாளான திங்கள்கிழமை, நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்திலிருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு வசந்த மண்டபத்திற்கு மாலை 6 மணிக்கு வந்து சேர்ந்தார். அங்கு அலங்காரம், அமுது செய்து சூர்ணாபிஷேகம் கண்டருளினார். பின்னர் வசந்த மண்டபத்திலிருந்து இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு இரவு 10 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.
இந்த வசந்த உற்சவ திருவிழாவின் 7ஆம் நாளான்று நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளி நெல்லளவு கண்டருளுகிறார், 9ஆம் திருநாள் அன்று நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளுகிறார். தீர்த்தவாரி மற்றும் திருமஞ்சனம் கண்டருளுவார்.
வசந்த உற்சவத்தின் போது 9 நாள்களும் வசந்த மண்டபத்தில் சூர்ணாபிஷேகம் என்றழைக்கப்படும் மஞ்சள் பொடியினை நம்பெருமாள் மீது தூவும் நிகழ்ச்சி இரவு 8 மணிக்கு நடைபெறும். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கொல்லிமலை கோயிலுக்கு 'இப்படி' ஒரு பெயர் இருப்பதற்கு காரணம் இதுதான்.. அறியப்படாத சில வரலாறு!