திருச்சி: சமயபுரம் அருகே 39ஆவது ஆண்டு வணிகர்கள் சங்க மாநாட்டில் இன்று (மே 05) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர், 'திமுக ஆட்சி பொறுப்பேற்ற நேரத்தில் கரோனா தொற்று மக்களை அச்சுறுத்தியது. கரோனா காலத்தில் பல்வேறு உதவிகளை வணிகர்கள் செய்தனர்.
வணிகர்களின் நலன் விரும்பும் ஆட்சி: அரசுக்கு உதவிய வணிகர்களுக்கு நன்றி சொல்லவே இங்கு வந்துள்ளேன். திமுகவிற்கு எப்போதும் திருப்புமுனை அளிப்பது திருச்சி தான். எதிர்க்கட்சியாக இருந்தபோதும், மக்களுக்கான பல்வேறு உதவிகளை செய்தது திமுக. இந்த ஆட்சி வணிகர்களின் நலனை பேணும் ஆட்சியாக எப்போதும் திகழும்.
வணிகர்கள் நலன் காக்கப்பட்டால் தான்; அரசுக்கு வருவாய் வருவதும் காக்கப்படும் என்பதை இந்த அரசு நன்கு உணர்ந்து வருகிறது. வணிக நலன் வாரியம் சீரமைக்கப்படும் என தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தோம். அதன்படி, ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, வணிகர் நல வாரியம் சீரமைக்கப்பட்டது.
ரூ.3 லட்சம் வணிகர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு: இனி தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரி சட்டத்தின்கீழ், படிவம் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டித்து அரசாணை வெளியிடப்பட்டது. பின்னர், ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்ததும் வரிவிதிப்பு முறைகளை மாற்றும்படி ஜிஎஸ்டி மன்றத்தில் திமுக சார்பில் எடுத்துரைக்கப்பட்டது.
வணிகர்களுக்கான குடும்பநல இழப்பீடு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். தீரர் கோட்டமாம் திருச்சியில் இது போன்று பல்வேறு கூட்டங்களை திமுக கண்டுள்ளது.
இப்பொழுது, வணிகர்களுக்காக நான் இங்கே வந்துள்ளேன். சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடக்கும் நிலையிலேயும், நான் இங்கே வந்திருக்கிறேன் என்றால் அதற்கு விக்ரமராஜா தான் காரணம். தலைவர் கலைஞர் சொல்வதைப்போல, எல்லோரும் பாதுகாப்பாக ஊர் போய் சேர்ந்தீர்கள் என்ற இனிய செய்தி என் காதை எட்டவேண்டும்' என முடித்துக்கொண்டார்.
இதற்கிடையே, திமுகவினர் அப்பகுதியில் வழிநெடுகிலும் கட்டியிருந்த கொடிகளை அகற்றச்சொல்லி வாய்மொழி உத்தரவு வந்ததால் அகற்றியதாக ஒரு தரப்பினர் தெரிவித்தனர். அதேபோல, பாஜக கடையைத் திறக்கச்சொல்லி போராட்டம் அறிவிப்பதாக இருந்தததாவும் ஆனால், அப்படி ஏதும் நடக்கவில்லை என்பதால் காவல் துறையினர் பெருமூச்சு விட்டனர்.
இதையும் படிங்க: புதிய ஹால்மார்க் விதிகளுக்கு நகை வணிகர்கள் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்?