திருச்சிராப்பள்ளி: மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையாரை தரிசிக்க நவீன தொழில்நுட்பத்துடன் ரோப் கார் வசதி செய்துத் தரப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு உறுதியளித்துள்ளார்.
இன்று (ஜூம் 16) திருச்சிராப்பள்ளி வந்த அமைச்சர் சேகர் பாபு, மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் ஆலயம், தாயுமானவர் கோயில், உச்சிப் பிள்ளையார் கோயில்களில் தரிசனம் செய்தார். பின்னர் கோயில் அலுவலர்கள், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோருடன் கோயில்களில் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், உச்சிப் பிள்ளையார் கோயிலுக்கு வெகுவிரைவில் அதிநவீன ரோப் கார் வசதி செய்து தரப்படும் என்று கூறினார். தமிழ்நாட்டிலுள்ள ஐந்து திருக்கோயில்களில் இந்த வசதி செய்துதரப்படவுள்ளது என்று தெரிவித்தார்.
மேலும், ரோப் கார் வசதி செய்து கொடுக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தார். இதனடிப்படையில் சோளிங்கர் நரசிம்மர் ஆலயம், திருநீர்மலை, திருச்சி உச்சிப்பிள்ளையார் கோயில், திருத்தணி முருகன் கோயில், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் என ஐந்து இடங்களில் ரோப் கார் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்து என்றார்.
இதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு முதலமைச்சரின் பார்வைக்கு வெகுவிரைவில் கொண்டுசெல்லப்படும் என்று கூறிய அமைச்சர், தமிழ்நாட்டில் சைவ-வைணவ ஆகம பள்ளிகளை திறக்க முடிவுசெய்யப்பட்டுள்ளதாவும், இதற்கு மாணவர்கள் விருப்பம் தெரிவித்து பதிவு செய்தால், தற்போது செயல்படாமல் உள்ள 6 பள்ளிகள் உடனடியாக புனரமைக்கப்பட்டு செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்படும் எனவும் தெரிவித்தார்.