திருச்சி: இந்து சமய அறநிலையத்துறை கோவில்களில் மாத சம்பளம் இன்றி பணியாற்றும் அர்ச்சகர்களுக்கு, தமிழ்நாடு அரசு சார்பில் கரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம், 10 கிலோ அரிசி, மளிகைப் பொருள்கள் ஆகியவை வழங்கும் நிகழ்ச்சி, திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு அர்ச்சகர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து வழிகாட்டு நடைமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
பிளஸ் 1 மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் பள்ளிக் கல்வித்துறை வசம் உள்ளது. எனவே, பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்குவது எளிதானது.
மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டு, அதுகுறித்த அறிவிப்பு விரைவாக வெளியிடப்படும். மேலும் கரோனா தொற்று குறித்த பெற்றோரின் அச்சம் குறைந்த பிறகே பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசிக்கப்படும்" என்றார்.