திருச்சி: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த 19ஆம் தேதி நடைபெற்று, 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிந்தது. தொடர்ந்து மார்ச் 2ஆம் தேதி திருச்சி மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் வெற்றிபெற்ற 65 மாமன்ற உறுப்பினர்கள் திருச்சி மாநகராட்சி ஆணையர் முஜிபூர் ரகுமான் முன்னிலையில் உறுதிமொழியை ஏற்று பதவியேற்றுக்கொண்டனர்.
திமுக தலைமை, திருச்சி மாநகராட்சியின் மேயர் வேட்பாளராக மு.அன்பழகன் மற்றும் துணை மேயர் வேட்பாளராக திவ்யா ஆகியோரை அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து, மேயர் மற்றும் துணை மேயருக்கான மறைமுகத் தேர்தல் இன்று (மார்ச் 4) திருச்சி மாநகராட்சியில் நடைபெற்றது.
சென்னையைப் போல திருச்சி
திருச்சி மாநகராட்சியின் 27ஆவார்டில் வெற்றி பெற்ற, மு.அன்பழகன் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். பின், மாநகராட்சி ஆணையர் முஜிபூர் ரகுமான் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் மேயர் அன்பழகனுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாநகர காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை உறுப்பினர் பழனியாண்டி, கிழக்கு சட்டப்பேரவை உறுப்பினர் இனிகோ இருதயராஜ் ஆகியோரும் வாழ்த்தினர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மேயர் அன்பழகன், 'குப்பை இல்லாத மாநகராட்சியாக திருச்சியை உருவாக்குவதே எனது முதல் பணி; மேயர் பதவியாக கருதாமல் பொறுப்பாகக் கருதுவேன். சென்னைக்கு அடுத்தபடியாக திருச்சி மாநகராட்சியை உருவாக்குவேன்' என்று கூறினார்.
இதையும் படிங்க: 101 சவரன் தங்க அங்கியில் ஜொலிக்கும் மதுரை பெண் மேயர்!!!