திருச்சி: எதிர்பார்க்கப்பட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு வந்துவிட்டது, ஆமாங்க பிப்ரவரி 19ம் தேதி தேர்தல், மூன்றுநாள் கழித்து வாக்கு எண்ணிக்கை.
இந்நிலையில் மலைக்கோட்டை மாநகரில் மல்லுக்கட்டுக்கு தயாராகி விட்டனர் வாரிசுகள் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். வாரிசு அரசியல் ஒன்றும் தமிழ்நாட்டிற்கு புதிதல்ல என்றாலும் கூட அரசியல்வாதிகள் மட்டுமல்லாமல் பொது மக்களிடமும் ஆர்வம் அதிகரித்து இருக்கிறது.
கே.என்.நேரு களம் இது
திமுகவில் கடந்த 30 ஆண்டுகளாக அசைக்க முடியாத சக்தியாக வலம் வரும் அமைச்சர் கே.என்.நேருவிற்கு செக் வைக்க அன்பிலார் குடும்பத்தில் இருந்து உதயநிதி ஸ்டாலினுக்கு வேண்டியபட்டவரான அன்பில் மகேஷ் பொய்யாமொழியை களமிறக்கியதோடு அமைச்சராகவும் ஆக்கி அழகு பார்த்தார்கள்.
கே.என்.நேருவிற்கு தலைமைக்கழகத்தில் முக்கியமான பதவியைக்கொடுத்து அவரை திருச்சி பக்கம் அதிகம் தலைகாட்டாமல் வைத்திருந்தார்கள். நேருவோ இதற்கெல்லாம் மசியாமல் தன்னுடைய விசுவாசிகளான காடுவெட்டி தியாகராஜன், வைரமணியை மாவட்ட செயலாளராக நியமனம் செய்து அவனன்றி ஒரு அணுவும் அசையாது என்பதை நிரூபித்துக்கொண்டு இருக்கிறார்.
உள்ளாட்சித் தேர்தலில் தனது மகன் அருண் நேருவை முன்னிருந்த சகல ஏற்பாடுகளையும் கையில் கே.என்.நேரு எடுத்துவிட்டார் என்கிறது அரசியல் வட்டாரம்.
இந்நிலையில் நேருவின் ஆதரவாளர்கள் சிலர், தலைமைக்கு வேண்டியபட்டவர் மகேஷ் என்பதால் ஆற்றில் ஒருகாலும் சேற்றில் ஒருகாலும் என அங்கேயும் இங்கேயும் தலையைக்காட்டி வருகிறார்கள். அவர்களில் முக்கியமானவர்கள் கண்ணன், குடமுருட்டி சேகர் ஆவர்.
பப்ளிசிட்டி நன்றாகவே இருக்கும்
அதிமுகவில், கொடுக்கற தெய்வம் கூரையை பிச்சுக்கிட்டு கொடுக்கும் என்பார்களே அந்த கதை யாருக்கு பொறுந்துகிறதோ இல்லையோ வெல்லமண்டி நடராஜனுக்கு சாலப்பொறுந்தும்.
ஆரம்ப காலத்தில் இருந்து அதிமுகவில் ஒரு அடிமட்டத் தொண்டனாக வலம் வந்த நடராஜனுக்கு 2016ல் பொன்மலையில் யோகம் அடித்தது. உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு என மேடையைவிட்டு இறங்கிய வெல்லமண்டியிடம் தெரிவித்தார் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா.
அதே தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் நிற்க வைத்ததுடன் அமைச்சராக்கி அழகு பார்த்தார். கரோனா தொற்று காலகட்டத்தில் இவர் மாங்காய் வழங்கியது மிகப்பிரபலமாக பேசப்பட்டது.
இவருடைய மகன் ஜவஹரை வரும் மாநகராட்சி தேர்தலில் களமிறக்க முடிவு செய்திருக்கிறாராம். அப்பா அமைச்சராக இருந்த காலத்தில் தனக்கென ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தை ஏற்படுத்திக்கொண்டு ஜவஹர் ஆட்டம் காண்பித்தார் என்கிறது அரசியல் வட்டாரம். ஆகவே வரும் தேர்தலில் பத்திரிக்கையாளர் பப்ளிசிட்டி நன்றாகவே இருக்கும் என்கிறார்கள் களநிலவரம் தெரிந்தவர்கள்.
துணை மேயர்னு இப்பவே துண்டை போடுறது கொஞ்சம் கூட நல்லா இல்ல
மதிமுகவில், ரொக்கையா ஷேக் முகமது சீட் கேட்கிறாராம். மகப்பேரு மருத்துவராக மக்கள் மத்தியில் அறிமுகமானவர் என்பதோடு தன்னுடைய தந்தையின் செல்வாக்கு கைகொடுக்கும் எனக் கருதுகிறார்.
ஆனால் அவரோட தந்தை காலமாகி ஒன்பது ஆண்டுகள் முடிந்துவிட்டது. இன்னைக்கு செய்ததையே நாளைக்கு மறந்துவிடுகிற உலகத்தில் இன்னும் இவரின் அப்பாவை நினைத்துக்கொண்டு இருப்பார்கள் என்கிறார்கள் மறுமலர்ச்சி இல்லாமல் மதிமுக சார்பாக கட்சியை வளர்க்க அரும்பாடு பட்டவர்கள்.
இவர்கூட்டம் போட்டால் பிரியாணிதான் ஸ்பெஷல் மெனு. ஒருமுறை தன்னுடைய வீட்டில் நடந்த திருமணத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் மதிமுக வண்ணத்தில் குடை வழங்கினார், அதுதான் அன்றைய மதிமுக சின்னமும் கூட.
அதற்கு வைகோ, குடை வழங்கிய கொடை வள்ளலே என்றார், கூட்டத்தில் ஒரே ஆரவாரம், எல்லாம் சரி கவுன்சிலர் சீட் கேட்குறாங்க கொடுக்கலாம் ஆனா துணை மேயர்னு இப்பவே துண்டை போடுறது கொஞ்சம் கூட நல்லா இல்லைனு திமுகவில் எதிர்ப்பு குரல் கேட்கிறது. ஆகவே மல்லுக்கட்டுக்கு தயாராகிவிட்டது மலைக்கோட்டை மாநகரம்.
இதையும் படிங்க: ஹெல்மெட், முகக்கவசம் இன்றி பைக் ரைடு; சர்ச்சையில் சிக்கிய சு.வெங்கடேசன்!