திருச்சிராப்பள்ளி: லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கு தொடர்புடைய குற்றப்பத்திரிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியிலுள்ள லலிதா ஜுவல்லரியில் 2019ஆம் ஆண்டு அகஸ்ட் 2ஆம் தேதி, ரூ.13 கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. கடையின் சுவற்றில் துளையிட்டு இந்த துணிகர கொள்ளை சம்பவம் நடந்தது.
இதுகுறித்து திருச்சி கோட்டை குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இவ்வழக்கில் திருவாரூரைச் சேர்ந்த கொள்ளையன் முருகன், இவரது சகோதரி கனகவல்லி, மைத்துனர் சுரேஷ், மணிகண்டன், மதுரை மாவட்டம் தெத்தூர் மேட்டுப்பட்டி கணேசன் ஆகியோரை காவல்துறையினர் கைதுசெய்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகளையும் மீட்டனர்.
லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கு: குற்றஞ்சாட்டப்பட்ட சுரேஷ் நீதிமன்றத்தில் ஆஜர்!
இந்த வழக்கில் நீண்ட நாட்களாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால், முருகனுக்கு திருச்சி ஜே.எம்-1 நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் பணி முடுக்கிவிடப்பட்டது. அப்போதைய கோட்டை குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கோசலைராம் உள்பட 25 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டு முருகன், சுரேஷ் உள்ளிட்ட 5 பேர் மீது குற்றப்பத்திரிகை ஜே.எம்-1 நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.