தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்தத் தேர்தலைச் சந்திக்க தேர்தல் ஆணையம் ஆயத்தப் பணிகளை மேற்கொண்டுவருகிறது. இந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒன்பது சட்டப்பேரவைத் தொகுதிகளில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருச்சியில் இருப்புவைக்கப்பட்டுள்ளன.
திருச்சி மாவட்ட பழைய ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்களைச் சரிபார்க்கும் பணி நடைபெற்றுவருகிறது. இந்தப் பணியை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பார்வையிட்டுவருகின்றனர்.
இந்த வகையில் இன்று (ஜன. 30) திமுக முதன்மைச் செயலாளர் கே.என். நேரு நேரில் பார்வையிட்டார். வாக்குப்பதிவு இயந்திரங்களின் நிலையை அவர் ஊழியர்களிடம் கேட்டறிந்தார். ஊழியர்களும் அவர் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளித்தனர்.
கே.என். நேருவுடன், திமுக மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகரச் செயலாளர் அன்பழகன், வழக்கறிஞர்கள் ஓம் பிரகாஷ், பாஸ்கர், அந்தோணி ராஜ், முன்னாள் ஒன்றியச் செயலாளர் பழனியாண்டி, மணிகண்டம் ஒன்றியச் செயலாளர் கருப்பையா, கதிர்வேல், பகுதிச் செயலாளர்கள் கண்ணன், காஜாமலை விஜய், இளங்கோ உள்பட பலர் கலந்துகொண்டனர்.