தந்தை பெரியாரின் 142ஆவது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் கே.என்.நேரு செய்தியாளரிடம் பேசினார்
அப்போது அவர் கூறியதாவது;
மத்தியில் ஆட்சியிலிருக்கும் பாஜக கையில் முழு இந்தியாவும் உள்ளது. இதனால் சூர்யா போன்ற நடிகர்கள் நீட் தேர்வுக்கு எதிராக பேசினாலும், மக்களுக்கு தேவையான கொள்கைகள் குறித்து பேசினாலும் வருமான வரி துறையை வைத்து மிரட்டும் செயல்களில் ஈடுபடுகின்றனர். ஆனால் நீட் தேர்வை பொறுத்தவரை தமிழ்நாடு மக்களின் கொள்கை வழிதான் வெற்றி பெறும். சட்டப்பேரவையில் முதலமைச்சர் பேசியது மட்டுமே ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அதற்கு திமுகவினர் பதில் கொடுத்தது எதுவும் வெளியிடப்படவில்லை. ஜல்லிக்கட்டு தடை நீக்கம் போல, நீட் தேர்விற்கு தடை கேட்டு பெறுவோம்.
மேலும், நீட் தேர்வுக்கு திமுக ஆட்சியில் அனுமதி அளித்ததாக கூறுவது தவறு. நீட் தேர்வு குறித்து ஆய்வு நடத்த மட்டுமே திமுக ஆட்சி காலத்தில் அனுமதி அளிக்கப்பட்டது. இது குறித்து பேசுபவர்கள் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை அனுமதியை ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கொடுக்கப்பட்டது குறித்து பேச மறுக்கின்றனர். விவசாயிகளுக்கு கடன் வழங்கும் திட்டத்தில் நடைபெற்ற ஊழலை கண்டுப்பிடித்துவிட்டோம் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் கூறுகிறார். 150 கோடி ரூபாய் அளவில் நடைபெற்ற ஊழலில் 70 பேர் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளனர். எங்களைப் பொறுத்தவரை உண்மையான அளவு பணத்தை திரும்பப் பெற்று உண்மையான விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.