நாகை மாவட்டம் சீர்காழி ஈசானி தெரு பகுதியைச் சேர்ந்த சமீரா பானு. அவரது பாட்டி கதிஜா பேகம். இவர்கள் கடந்த 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக சீர்காழி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்தது. இந்த விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் சமிரா பானுவின் தந்தை முகமது யூசப் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இவ்வழக்கை சிபிசிஐடி காவலர்கள் விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டது. சிபிசிஐடி காவலர்களுக்கு இவ்வழக்கு மாற்றப்பட்ட நிலையில், கடலூர் புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் குமார் என்பவரை 9 ஆண்டுகளுக்குப் பிறகு நாகை சிபிசிஐடி போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் அவருடன் கொலை செய்த தினேஷ் சுரேஷ் ஆனந்த் உள்ளிட்ட 3 பேரையும் சிபிசிஐடி காவலர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த கும்பல் ரோஸ் மில்க் பாதாம் கீர் உள்ளிட்ட குளிர்பானங்கள் விற்பது போன்று தனியாக வசிக்கும் முதியோர்களின் வீடுகளை நோட்டமிட்டு பின்னர் அவர்களை தாக்கி கொலை செய்துவிட்டு பணம் மற்றும் நகைகளை கொள்ளை அடித்து வந்தது தெரியவந்தது.
தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இதேபோன்று கொலைகள் செய்யப்பட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தீரன் பட பாணியில் கொள்ளையடிக்கும் இந்த கும்பல் 9 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கியுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டுள்ள சுரேஷ், நாகப்பட்டினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: குடிபோதையில் தந்தையை அடித்துக் கொன்ற மகன் கைது!