திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "திருச்சி விமான நிலையத்திலிருந்து மார்ச் 8ஆம் தேதி முதல் வருகைதந்த வெளிநாட்டுப் பயணிகள் மூன்றாயிரத்து 400 பேருக்கு மருத்துவக் குழுவினரால் விமான நிலையத்திலேயே பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் 191 பேருக்கு சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறி இருந்ததால், திருச்சி அரசு மருத்துவமனை, கள்ளிக்குடி கரோனா தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு கண்டறிதல் சோதனைகள் நடத்தப்பட்டன.
இதில் யாருக்கும் கரோனா தாக்குதல் இல்லை என்பது ரத்த பரிசோதனை முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளது. அந்தவகையில் நேற்று துபாய், சார்ஜாவிலிருந்து வந்த 428 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 34 பேருக்கு சளி, காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவர்கள் கள்ளிக்குடியில் தனிமைப்படுத்தப்பட்ட கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய 191 பேரும் தொடர்ந்து மருத்துவக் குழுவினரால் கண்காணிக்கப்பட்டுவருகிறார்கள்.
திருச்சி மாவட்டத்தில் 96 திருமண மண்டபங்களில் பல்வேறு சுப காரியங்களுக்கு முன்னதாகவே பதிவுசெய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சிகளை நடத்துவோர் குறிப்பிட்ட நேரத்திற்குள் முடித்துக் கொள்ளவும், அதிக அளவில் கூட்டம் கூடாமல் பார்த்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் கரோனா பாதுகாப்புக்கு முகக் கவசம் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை.
ஏற்கனவே கரோனா ரத்தப் பரிசோதனை மேற்கொள்ளும் மையம் இந்தியாவிலேயே புனேயில் மட்டும்தான் இருந்தது. இதற்கு அடுத்தபடியாக கிங்ஸ் மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் ஐந்து இடங்களில் பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இதில் ஒன்று திருச்சி அரசு மருத்துவமனையில் அமைவதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளன.
நகர்ப்புறப் பகுதிகளில் கைகழுவும் விழிப்புணர்வு அதிகளவில் உள்ளது. ஆனால் கிராமப்புற மக்களிடம் இது சற்று குறைவாக உள்ளது. மகளிர் சுய உதவிக்குழு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவருகிறது. சமூக வலைதளங்களில் பரவும் தவறான கருத்துகளால் மக்களை பீதி அடைய வேண்டாம். தவறான பரப்புரையில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.