திருச்சி: பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி முன்னாள் மாநகர் மாவட்டத் தலைவராக இருந்த டாக்டர்.ஸ்ரீதர் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு, தில்லைநகர்ப் பகுதியில் அவர் வீட்டின் அருகே படுகொலை செய்யப்பட்டார்.
இதற்காக ஒவ்வொரு ஆண்டும் நினைவு நாளை பயங்கரவாத எதிர்ப்பு நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு (02.02.2022)நேற்று 23ஆம் ஆண்டு நினைவஞ்சலி தில்லைநகர் பகுதியில் திருச்சி மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ராஜசேகரன் தலைமையில் நடைபெற்றது. இந்த நினைவஞ்சலிக் கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள், இந்து அமைப்பினர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா இறந்த டாக்டர் ஸ்ரீதரின் படத்திற்கு மலர்த்தூவி மலரஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசும்போது, “தமிழ்நாடு பயங்கரவாத சக்திகளின் கூடாரமாக இருக்கிறது. தமிழ்நாடு மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் உள்ள ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட இந்து அமைப்புகளை படுகொலை செய்வதற்கான திட்டங்கள் இங்கு தான் தீட்டப்படுகின்றன.
எனவே, தமிழ்நாடு அமைதிப்பூங்கா என்று சொல்வதை ஏற்க முடியாது. பிரிவினைவாத சக்திகளை ஊக்குவிக்கும் வகையில் ஒன்றிய அரசு என்று கூறும், சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவாலை கடுமையாக எச்சரிக்கிறேன். ஐஏஎஸ், ஐபிஎஸ் அலுவலர்கள், மத்திய அரசின் அலுவலர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மட்டுமே பாஜக தனித்துப் போட்டியிடுகிறது. மத்தியில் அதிமுகவுடனான கூட்டணி தொடர்கிறது. இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் தேவையில்லை.
அரியலூர் மாணவி வழக்கை, சிபிஐ விசாரணைக்கு மாற்றியது, நீதிபதியின் பரந்த ஞானத்தைக் காட்டுகிறது. தமிழ்நாட்டில் நீதி விசாரணை நேர்மையாக நடக்காது என்பதை அவர் நன்கு அறிந்திருக்கிறார்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: முதன் முறையாக விமானத்தில் பயணம் செய்த மகளிர் குழுவைச் சேர்ந்த பெண்கள்!