திருச்சி: சொத்து வரி உயர்வை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் இன்று (ஏப். 5) கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலும், திருச்சியில் எதிர்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மத்திய அரசு மீது பழிபோடும் திமுக: திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தின் போது எடப்பாடி பழனிசாமி பேசுகையில், "மத்திய அரசே சொத்துவரியை உயர்த்த சொல்லியதாக திமுக கூறிவருகிறது. அப்படி எங்கும் மத்திய அரசு குறிப்பிடவில்லை. வீண் பழியை போட்டு திமுக மக்கள் ஏமாற்ற பார்க்கிறது.
இந்தியாவிலேயே தேர்தல் அறிக்கையை புத்தகம் போட்டு வெளியிட்ட கட்சி திமுகதான். அந்த புத்தகத்தின் 487ஆவது அறிவிப்பில் சொத்துவரி உயர்த்தப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா காலத்தில் மக்கள் கஷ்டப்படுகிறார்கள் என்று கூறிவிட்டு, தற்போது சொத்துவரியை உயர்த்துவிட்டனர்.
தாலிக்கு தங்கம் என்கிற அற்புதமான திட்டம் மூலம் பல லட்சம் ஏழை குடும்பத்தை சேர்ந்த பெண்கள் பலன் அடைந்தார்கள். அதேபோலதான் திருமண உதவி திட்டமும். இந்த திட்டங்களை நிறுத்தி விட்டார்கள். ஊர் ஊராக சென்று திண்ணையில் துண்டை போட்டு பெட்டியில் குறைகளை போடுங்கள் என்றார் ஸ்டாலின். அத்துடன் கோரிக்கை நிறைவேவில்லை என்றால் நேரில் வந்து பாருங்கள் என்றும் சொன்னார். இப்போது எவ்வளவு பேரை அவர் சந்தித்துள்ளார்.
அரசு அதிகாரிகளுக்கு கட்சி பணம் எதுக்கு: திமுக செலவில்தான் முதலமைச்சர் துபாய் சென்றதாக கூறுகிறார்கள். திமுக பணத்தில், அரசு அதிகாரிகள் ஏன் துபாய் செல்ல வேண்டும்?. துபாய் சர்வதேச கண்காட்சி கடந்தாண்டு 10ஆவது மாதமே தொடங்கிவிட்டது. அது முடிய 6 நாள்களே இருக்கும் வேளையில் ஸ்டாலின் அவசரமாக சென்றுள்ளார்.
இதற்கு காரணமம் 10 மாதமாக கொள்ளை அடித்த பணத்தை துபாயில் முதலீடு செய்ய தான். இந்த விடியா அரசு 150 விழுக்காடு சொத்து வரியை உயர்த்திவிட்டது. இது கண்டனத்துக்கு உரியது. ஸ்டாலினுக்கு பொதுமக்களை பற்றிய கவலை இல்லை. அவரது வீட்டு மக்களை பற்றிய கவலையே உள்ளது.
இந்தியாவிலேயே அதிகமாக உயர் கல்வி படிக்கும் மாணவர்கள் உள்ள மாநிலம் என்ற நல்ல பெயரை தமிழ்நாட்டுக்கு, அதிமுக ஆட்சியில் பெற்று தந்தோம். அதனாலேயே 52 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கினோம். ஏழை மாணவர்களுக்கு பலன் அளிக்கும் இத்திட்டத்தையும் திமுக ரத்து செய்ய முயற்சித்துவருகிறது.
விளம்பரத்தில் இயங்கும் திமுக: திமுக ஆட்சியில் கட்டுமான பொருள்களின் விலை உயர்ந்துள்ளது. ஒரு சிமெண்ட் மூட்டைக்கு 30 ரூபாய் திமுகவிற்கு செல்கிறது. அப்படி என்றால் எவ்வளவு கோடிகள் செல்லும் என்று மக்கள் சிந்திக்க வேண்டும்.
விளம்பரத்தில் மட்டுமே திமுக இயங்கி வருகிறது. இல்லை என்றால் காணாமால் போய் விடும். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தல் வந்தாலும் வரலாம். ஒரே நாடு ஒரே தேர்தலுக்கான ஏற்பாடுகளும் நடைபெற்றுவருகின்றன.
எனவே கிடைத்த வாய்பை பயன்படுத்திக்கொண்டு மக்களுக்கு நல்லது செய்ய பாருங்கள். மக்கள் இப்படியே கடந்து சென்று விடுவார்கள் என்று எண்ணி விடாதீர்கள். மிகப் பெரிய போராட்டத்தை மக்கள் நடத்தக்கூடும். இதனை எச்சரிக்கையாக கூறி கொள்ள விரும்புகிறேன்.
தமிழ்நாட்டில் பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. காவல்துறை செயலிழந்து விட்டது. ஆன்லைன் ரம்மியை தடை செய்வோம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், நடவடிக்கை இல்லை.
இதனால் இளைஞர்கள், மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுவருகின்றனர். பெண்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை. திராவிட மாடல் இது தானா?. இதனை எல்லாம் சரி செய்யவில்லை என்றால் திமுகவிற்கு எதிர்காலமே இருக்காது.
அம்மா மினி கிளினீக்கை இப்போது மூடி விட்டார்கள். அம்மா என்கிற பெயரை கேட்டாலே ஸ்டாலினுக்கு அலர்ஜியாகி விடுகிறது. மின் வெட்டு இப்போது தான் ஆரம்பித்துள்ளது. இந்த ஆட்சியில் மக்களுக்கு எந்த துன்பமும் இல்லை என்கிறார் ஸ்டாலின், ஆனால் திமுக ஆட்சியில் இருப்பதே துன்பம் தான்" என்றார்.
இதையும் படிங்க: மக்கள் கண்ணீருக்கு திமுக பதில் சொல்லியே ஆக வேண்டும்... ஓ. பன்னீர்செல்வம்...