திருச்சிராப்பள்ளி: மணப்பாறை சுற்று வட்டாரப்பகுதியில் இன்று அதிகாலை 6 மணிமுதல் பரவலாக மழை பெய்யத் தொடங்கியது.
சுமார் இரண்டரை மணி நேரம் பெய்த கனமழையால் மணப்பாறை நகராட்சிக்குட்பட்ட அப்பு அய்யர் குளம் வழிந்து ராஜிவ் நகர் குடியிருப்புப் பகுதியிலும், சாலைகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதேபோல் அத்திகுளம், சொக்கலிங்கபுரம், கீரைத்தோட்டம், காய்கறிச் சந்தை உள்ளிட்டப் பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மணப்பாறை பேருந்து நிலையம் முன்பு மழைநீர் இடுப்பளவு தேங்கியதால் பேருந்துகள் பேருந்து நிலையத்திற்குள் செல்ல முடியாத சூழல் இருந்தது.
இதனால் புதுக்கோட்டை மற்றும் பாலக்குறிச்சியிலிருந்து வரும் பேருந்துகள் காமராஜர் சிலையோடு திருப்பி அனுப்பப்பட்டது.
அதேபோல், மதுரை மற்றும் திண்டுக்கல் சாலை வழியாக வரும் வாகனங்கள் பேருந்து நிலையம் அருகிலுள்ள பெரியார் சிலை ரவுண்டானா பகுதியோடு பயணிகளை இறக்கிவிட்டும் பின்னர் ஏற்றிக் கொண்டும் செல்கின்றன.
இதனால், விராலிமலை மன்றம் பாலக்குறிச்சி செல்லும் பொதுமக்கள் சுமார் ஒன்றரை கிலோமீட்டர் நீரில் தத்தளித்தவாறு செல்லும் அவல நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து சுமார் ஆறு மணி நேரத்திற்குப் பிறகு மணப்பாறை பெரியார் சிலை ரவுண்டானா பகுதிக்கு வந்தடைந்த மணப்பாறை தீயணைப்புத் துறையினர், பரிசல் மூலம் பேருந்து நிலையம் முன்புள்ள மழைநீரைக் கடக்கப் பொதுமக்களுக்கு வழி வகை செய்தனர்.
மழைநீர் பாதியளவு வடிந்த பிறகு பரிசல் மூலம் தீயணைப்புத் துறையினர், பொதுமக்களை மீட்பது போல் போட்டோ ஷூட் நடத்துவதாகத் தெரிவித்து அப்பகுதி மக்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: மதுரை வைகை ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு