மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி டெல்லியில் உழவர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து இரவு பகலாக நடைபெற்றுவரும் இந்தப் போராட்டம் தேசியளவில் உழவர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வகையில் திருச்சியைச் சேர்ந்த தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் உழவர்கள் கடந்த வாரம் டெல்லிக்குப் புறப்பட்டனர். அவர்களைக் காவல் துறையினர் ரயில் நிலையத்தில் வைத்து கைதுசெய்தனர்.
மேலும் தொடர்ந்து திருச்சி உறையூர் அண்ணாமலை நகரில் உள்ள வீட்டில் அய்யாக்கண்ணுவை காவல் துறையினர் வீட்டுக்காவலில் வைத்துள்ளனர். இந்நிலையில் உழவர்கள் இன்று (டிச. 07) திருச்சி-கரூர் புறவழிச் சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
டெல்லி போராட்டத்தில் கலந்துகொள்ள அனுமதிக்க வேண்டும், மத்திய அரசு புதிதாக நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இறந்த எலியின் உடலைக் கையில் ஏந்தி உழவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து திருச்சி கரூர் சாலையில் மறியலில் உழவர்கள் ஈடுபட்டனர். உடனடியாக காவல் துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடச் செய்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இது குறித்து அய்யாக்கண்ணு கூறுகையில், “டெல்லியில் நடைபெறும் போராட்டத்தில் கலந்துகொள்ள சென்ற எங்களைத் தடுத்து நிறுத்தி காவல் துறையினர் வீட்டுக் காவலில் வைத்துள்ளனர். இது எந்த விதத்தில் நியாயம்.
நாங்கள் என்ன தீவிரவாதிகளா, இது ஜனநாயக நாடா, சர்வாதிகார நாடா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதனால் உடனடியாக எங்களை டெல்லிக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர உள்ளோம்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஈடிவி பாரத் செய்தி எதிரொலி: மரங்களை பாதுகாக்க தொடங்கப்பட்ட பரப்புரை