திருச்சி: உத்தரப்பிரதேச மாநிலம், லக்கிம்பூரில் ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளின் மீது, காரை ஏற்றியதில், நான்கு விவசாயிகள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து நடந்த கலவரத்தில் நான்கு விவசாயிகள் கொல்லப்பட்டனர்.
இச்சம்பவத்தைக் கண்டித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஒன்றிய அமைச்சரை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
அந்த ஆர்ப்பாட்டத்தில், 'ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும்; அவரையும் அவரது மகன் ஆஷிஷ் மிஸ்ரா மீதும் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும். ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் திருத்த சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும்' உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
திருச்சி அண்ணாமலை நகர், கரூர் பைபாஸ் சாலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத் தலைவர்கள் கரூர் தட்சிணாமூர்த்தி, பரமசிவம், மாநிலச் செயலாளர் நகர் ஜான் மெல்கியோராஜ்,
மாநில செய்தித் தொடர்பாளர் பிரேம்குமார், மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: கைதை கண்டித்து பிரியங்கா காந்தி உண்ணாவிரதம்