திருச்சி: மணப்பாறையில் மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் 98ஆவது பிறந்தநாள் விழாவை திமுகவினர் அம்மா உணவகத்தில் கொண்டாடினர். அம்மா உணவகத்தின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்திய திமுகவினர், அம்மா உணவகப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
அதனைத்தொடர்ந்து, நேற்று முழுவதும் அம்மா உணவகத்தில் உணவருந்தும் அனைவரின் கட்டணத்தையும் திமுகவினரே நகராட்சி நிர்வாகத்திற்குச் செலுத்துவதாகக் கூறி பொதுமக்களுக்கு உணவுகளை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திமுக நிர்வாகிகள் 'ஸ்டாலின் வாழ்க, டாக்டர் கே.என். நேரு வாழ்க' என முழக்கமிட்ட திமுக நிர்வாகிகள் யாரும், மாவட்டச் செயலாளரும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் பெயரைக் குறிப்பிடவேயில்லை.
திருச்சியின் ஒன்பது தொகுதிகளில் 'கிளீன் ஸ்வீப்' அடித்த திமுக, சீனியர் கே.என். நேரு, ஜூனியர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி என இருவருக்கும் அமைச்சரவையில் இடம் கொடுத்து திருச்சிக்கு அழகுச் சேர்த்தது.
இதில், அன்பில் மகேஷுக்கு ஊடக வெளிச்சம் அதிக கிடைப்பதால்தான், நேருவின் ஆதரவாளர்கள் அன்பில் மகேஷை புறக்கணிக்கின்றனர் என்று கூறப்படுகிறது.
நேற்றைய சம்பவம் பிற திமுக நிர்வாகிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: அன்பில் மகேஷ் ஆலோசனை