திருவாரூர் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் நேற்று குடிநீரில் கழிவுநீர் கலந்ததால், அப்பகுதி மக்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை நலம் விசாரிப்பதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் இன்று மருத்துவமனைக்குச் சென்றார். பாதிக்கப்பட்டவர்களிடம் உடல் நலம் குறித்து அவர் கேட்டறிந்தார்.
மேலும், மருத்துவர்களிடம் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்துக் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பாலகிருஷ்ணன், “ திருவாரூர் மாவட்டம் முழுவதும் காலரா அதிகமாக பரவி வருகிறது. குறிப்பாக நகராட்சியால் வழங்கப்படும் குடிநீர் மூலம் பல்வேறு நோய்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே சுகாதாரத்துறை சார்பில் சிறப்புக் குழுவை அமைத்து, மருத்துவ முகாம்களை இங்கு நடத்த வேண்டும்.
கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த ஆய்வு மையங்களை மாவட்டம் தோறும் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஓபிஎஸ் உட்பட 11 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கில் பேரவைத் தலைவர் தனபால், ஓ.பன்னீர்செல்வம் குழுவினருக்கு ஆதரவாக செயல்படுகிறார். பதினோரு உறுப்பினர்கள் மட்டுமின்றி பேரவைத் தலைவரும் சட்டத்தின் முன்பாகவும், மக்கள் முன்பாகவும் பதில் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும் ” என்றார்.
இதையும் படிங்க: என்பிஆர் விவகாரம் - சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!