கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் உள்ளன. இந்நிலையில், மருத்துவ மாணவர்களுக்காக நீட் தேர்வு நடைபெறுமென மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டது. இதையடுத்து நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ரத்துசெய்ய வேண்டுமென காங்கிரஸ் கட்சியினர் இன்று (ஆகஸ்ட் 28) மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவற்றுள் சில ...
கரூர்: காரோனா காலத்தில் நீட் மற்றும் ஜெஇஇ தேர்வுகளை நடத்தும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டுமென கரூர் பேருந்து நிலையம் அருகே காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயலாளர் சின்னசாமி தலையில், அக்கட்சி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி: கரோனா தொற்று பரவும் காலத்தில் மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்திடவும், வருங்காலங்களிலும் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்யக் கோரியும் கள்ளக்குறிச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சித்தலைவர் ஜெய்கணேஷ் தலைமையில், அக்கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: கரோனா காலம் முடியும் வரை நீட் மற்றும் ஜெஇஇ தேர்வுகளை மத்திய அரசு ரத்துசெய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி: கரோனா வைரஸ் தொற்று காலத்தில் மாணவர்களின் நலன் கருதாமல் நீட், ஜேஇஇ தேர்வுகள் நடத்துவதை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜவகர் தலைமையில், அக்கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல்: கரோனா காலம் முடியும் வரை நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ரத்து செய்ய கோரியும், மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகளை கண்டித்தும் நாமக்கல்லில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சேலம்: கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், மாணவர்களின் நலன் கருதி நீட் மற்றும் ஜெஇஇ தேர்வுகளை மத்திய அரசு ரத்துசெய்ய வேண்டுமென ஆட்சியர் அலுவலகம் எதிரில் காங்கிரஸ் கட்சியினர் தொடர் முழக்கத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு: மத்திய அரசு அறிவித்துள்ள நீட் மற்றும் ஜெஇஇ தேர்வுகளை இந்தாண்டு ரத்துசெய்யக் கோரியும், இந்த தேர்வுகளை தமிழ்நாட்டில் நடத்த மறுப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கக்கோரியும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல் நீட் மற்றும் ஜெஇஇ தேர்வுகளை ரத்துசெய்யக்கோரியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கோவை, திருப்பத்தூர், கன்னியாகுமரி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களிலும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கண்டன கோஷங்களையும் எழுப்பினர்.
இதையும் படிங்க: மன அழுத்தம் போக்கும் உஜ்ஜைனி விநாயகர்!