திருச்சிராப்பள்ளி: இரண்டு தினங்களாக தேர்தல் பரப்புரை மேற்கொண்ட முதலமைச்சர் பழனிசாமி தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “எங்களது தேர்தல் பரப்புரைக்கு மக்கள் சிறப்பான வரவேற்பை அளித்துள்ளனர். முதலமைச்சர் வேட்பாளர் விஷயத்தில் கூட்டணி கட்சிகள் யாரும் முரண்டு பிடிக்கவில்லை. ஏற்கனவே என்னை முதலமைச்சர் வேட்பாளராக அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் அறிவித்துவிட்டார்.
அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமையும். ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு நிலைப்பாடு இருக்கும். இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. அந்தந்த கட்சிகளின் தொண்டர்களையும் நிர்வாகிகளையும் ஊக்குவிப்பதற்காக, அப்படி பேசுவது இயற்கை.
ஏற்கனவே எங்களது கூட்டணியில் இடம் பெற்ற கட்சிகள் தற்போதும் நீடிக்கிறது. மேலும் கூட்டணியில் கட்சிகள் சேருமா? என்பது தேர்தல் சமயத்தில் தான் கூற முடியும். தேர்தல் அறிவித்த பின்னர் தான் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் நடைபெறும். தேர்தல் சமயத்தில் போதுமான நாட்கள் இருக்காது.
திமுக, அதிமுகவுக்கு மாற்று மக்கள் நீதி மையம் தான் என்று கமலஹாசன் சொல்லலாம். ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் கருத்து கூறலாம். ஆனால் மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவருக்கு எவ்வளவு செல்வாக்கு இருக்கிறது என்பது தெரிந்துவிட்டது. ரஜினி என்ன நிலைமையில் இருக்கிறார் என்று எனக்குத் தெரியாது. அவர் கட்சி தொடங்குகிறாரா? இல்லையா? என்பது எனக்குத் தெரியாது. அதனால் மற்றவர்களின் விஷயத்தில் தலையிடுவதை நன்றாக இருக்காது.
பொதுக்குழு கூட்டம் முடிந்த பிறகு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பரப்புரை மேற்கொள்வார். எனது பெயரே எடப்பாடி பழனிச்சாமி. அதனால் எடப்பாடி தொகுதியை தவிர வேறு எங்கும் நான் போட்டியிட மாட்டேன். நான் அரசியலில் இருக்கும் வரை எடப்பாடி தொகுதியில் மட்டுமே போட்டியிடுவேன். தோல்வி பயம் காரணமாக நாள் இரண்டாவது தொகுதியில் போட்டியிடுவதாக கூறுவது தவறு.
நான் ஏற்கனவே எடப்பாடி தொகுதியில் 6 முறை சட்டப்பேரவைத் தேர்தலிலும், மூன்று முறை மக்களவைத் தேர்தலிலும் போட்டியிட்டுள்ளேன்” என்று தெரிவித்தார்.