திருச்சி: மணப்பாறை உட்கோட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட அனைத்துக் காவலர்கள் பங்கேற்ற அணிவகுப்பு மற்றும் பயிற்சிகள் குறித்து திருச்சி மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் நேரில் ஆய்வு நடத்தினார்.
அப்போது காவலர்களின் பயிற்சி, சீருடைகள் குறித்தும் ஐஜி பார்வையிட்டார்.
அதனைத்தொடர்ந்து தனியார் பள்ளி மைதானத்தில் தேசிய மாணவர் படை மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
சீருடை ஆய்வில் கிடைத்த அங்கீகாரம்
சீருடை ஆய்வின்போது பணியில் சிறப்பாகப் பணியாற்றி பதக்கங்களைப் பெற்று வரும் தலைமைக் காவலர் ராமுவை மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் வெகுவாகப் பாராட்டினார்.
மேலும் மணப்பாறை, வையம்பட்டி, துவரங்குறிச்சி, புத்தாநத்தம் மற்றும் வளநாடு உள்ளிட்டப் பகுதிகளில் சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் உள்ள வழக்கு சம்பந்தமான கோப்புகளை ஆய்வு செய்தார்.
இதனையடுத்து உட்கோட்டப் பகுதிகளில் ரோந்துப் பணிகள் அதிகப்படுத்தப்படும் என்றும்; சிறுமிகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க பள்ளிக்கல்வித்துறையுடன் இணைந்து காவல் துறையும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றது எனவும் கூறினார்.
குற்ற எல்லைகளை விரிவுப்படுத்தி அதிக அளவில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என்றும்; விரைவில் மணப்பாறை பேருந்து நிலையம் அருகில் போக்குவரத்து மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையம் அமைக்கும் பணி தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
ஆய்வின் போது திருச்சி எஸ்பி சுஜித்குமார், டிஎஸ்பி ஜனனி பிரியா ஆகியோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க:பள்ளி விபத்து: சபாநாயகர், அமைச்சர் நேரில் அஞ்சலி