திருச்சி: திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளர் கே.என்.நேரு மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு திருச்சி (மேற்கு) தொகுதியில் போட்டியிடுகிறார். இந்தத் தொகுதி எல்லைக்குள் உள்ள தில்லைநகர், அரசு மருத்துவமனை காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலர்களுக்கு தபால் ஓட்டு போடுவதற்காக தலா 2,000 ரூபாய் கொடுத்ததாக நேரு மீது அதிமுகவினர் குற்றஞ்சாட்டினர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு திருச்சி மாவட்டம் முசிறி சட்டப்பேரவை தொகுதி திமுக வேட்பாளர் காடுவெட்டி தியாகராஜன் மற்றும் திமுக நிர்வாகிகளிடம் கே.என். நேரு பேசும் வீடியோ வைரலானது.
இந்த வீடியோவில் நேரு ஆபாசமாக பேசி, வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது குறித்து ஆலோசனை வழங்கிய உரையாடல்கள் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில் இந்த வீடியோ பேச்சு தொடர்பாக கே.என்.நேரு மீது நான்கு பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையில் திருச்சி மேற்கு தொகுதியில் பணப் பட்டுவாடா நடைபெற்று இருப்பதால் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அலுவலரை சந்தித்து மனு அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.