திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் மூன்று நாள் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்திருந்தனர். அதன்படி தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் இன்று தொடங்கியது.
இதில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நான்கு மாத ஊதியத்தை உடனே வழங்க வேண்டும், நீதிமன்ற தீர்ப்பின்படி 2009-10ஆம் ஆண்டுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், ஈபிஎப், இஎஸ்ஐ-க்கு பிடித்தம் செய்த பணத்தை உரிய இடத்தில் கட்டுவதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பிஎஸ்என்எல் ஒப்பந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்திற்கு பின்னர் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அகில இந்திய அளவில் போராட்டம் நடைபெறும் என்று சங்க மாவட்ட செயலாளர் அஸ்லம் பாஷா எச்சரிக்கை விடுத்துள்ளார்.