திருச்சி: சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு, தன்னார்வலர்கள் தேசிய பேரிடர் மீட்பு அமைப்பான 'உயிர் காக்கும் கரங்கள்' கட்டளையின் நான்காம் ஆண்டு தொடக்க விழா, முப்பெரும் விழா நடைபெற்றது.
திருச்சி அரியமங்கலம் உக்கடை நாகமணி தெருவில் நடைபெற்ற இந்த விழாவில், உயிர் காக்கும் அறக்கட்டளை சார்பில், அவசர மருத்துவத் தேவைக்கு என ஆட்டோக்கள், மீட்டர் ஆட்டோக்கள் சேவை தொடங்கப்பட்டது.
இதனை திமுக தெற்கு மாவட்டச் செயலாளரும், திருவெறும்பூர் சட்டப்பேரவை உறுப்பினருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி கொடியசைத்து தொடங்கிவைத்தார். உயிர் காக்கும் கரங்கள் அவசர சேவை மையத்தை காந்தி மார்க்கெட் வியாபாரிகள் சங்கத் தலைவர் கமலக்கண்ணன் தொடங்கிவைத்தார். இவ்விழாவுக்கு உயிர் காக்கும் கரங்கள் நிர்வாக இயக்குநர் அப்துல் கபூர் தலைமை வகித்தார்.
இன்று நடந்த விழாவில் சுமார் 50 ஆட்டோக்கள் தொடங்கிவைக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முறையாக இத்தகைய திட்டத்தில் ஆயிரம் ஆட்டோக்களை இணைத்து அறிமுகம் செய்யப்பட உள்ளது.
அவசர மற்றும் அத்தியாவசிய தேவைக்கு 8448 107 108 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு இந்த ஆட்டோக்களை 24 மணி நேரமும் முன்பதிவு செய்யலாம். வீட்டிலிருந்தபடியே மூன்று நிமிடங்களில் இந்தச் சேவையை பெற்றுக் கொள்ளலாம். ஆட்டோ கட்டணத்தை இணையம் மூலம் செலுத்தலாம்.
இந்தத் திட்டத்தில் இணைந்துள்ள ஆட்டோக்களுக்கு என்று பிரத்யேக ஸ்டிக்கர் வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு அடையாள அட்டையும் வழங்கப்பட்டுள்ளது. குறைந்த கட்டணத்தில் மருத்துவச் சேவைக்கு மட்டுமின்றி அத்தியாவசிய தேவைக்கு இந்தப் பாதுகாப்பான ஆட்டோ சேவையை திருச்சி மாநகர மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : கரூர் சட்டப்பேரவை தொகுதியில் பயனாளிகளுக்கு கடனுதவி