உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அனைத்துக் கட்சியினருக்கான கலந்துரையாடல் கூட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிமுக, திமுக, காங்கிரஸ்., கம்யூனிஸ்ட். உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்றனர். அவர்களிடம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்தும், தேர்தலில் வேட்பாளர்களின் செலவுகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
அப்போது பேசிய மாவட்ட ஆட்சியர் தேர்தல் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் நடைபெறும். விதிமீறல்கள் இருந்தால் தகவல் அளித்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். உள்ளாட்சித் தேர்தலை ஒரேகட்டமாக நடத்தவேண்டும் என்று திமுக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தன.
மேலும் அ.தி.மு.க, பா.ஜ.க ஆகிய இரண்டு கட்சிகளைத் தவிர்த்து தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கூட்டாக கையெழுத்திட்டு, தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சி தேர்தலை ஒரேகட்டமாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர். அந்த மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் அதனை மாநில தேர்தல் ஆணையத்திற்கு அனுப்புவதாக உறுதியளித்தார்.