திருச்சி: பாரதிய ஜனதாவுடன் கூட்டணி, தமிழ் மாநில காங்கிரஸுடன் கூட்டணி என எதிர்பார்த்திருந்த நிலையில், திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளிலும் தனியே போட்டியிடப்போவதாக அதிரடியாக பட்டியலை வெளியிட்டு இருக்கிறது, அதிமுகவின் தலைமை.
அதிமுகவின் வேட்பாளர் பட்டியல் அமாவாசை நன்னாளில் வெளியாக குஷியில் இருக்கிறார்கள், ரத்தத்தின் ரத்தங்கள். அறிந்த முகம் அறியாத முகம் என வரிசைகட்டி நிற்கும் வேட்பாளர்கள் உற்சாகமாகத் தேர்தல் பணிகளில் ஈடுபடத் தொடங்கிவிட்டார்கள்.
அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குமாரின் வசம் 13 பேரும்; முன்னாள் அமைச்சர் பரஞ்சோதிக்கு வேண்டிய 7 பேரும், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுக்கு வேண்டிய 45 பேரும் அதிமுக சார்பில் களமிறக்கப்பட்டிருக்கிறார்கள்.
இதில் கூடுதல் சிறப்பு வெல்லமண்டி நடராஜன் தன்னுடைய மகன் ஜவஹரை திருச்சியின் 20ஆவது வார்டிலும்; முன்னாள் துணைமேயர் ஜெ.சீனிவாசன் 34ஆவது வார்டிலும்; சீட்டே வேண்டாம் என ஒதுங்கியிருந்த பிரியா சிவக்குமாரை 7ஆவது வார்டிலும் களமிறக்கி அழகு பார்த்திருக்கிறார்கள்.
கிட்டத்தட்ட 6 முனைப்போட்டி நிலவுவதாலும் சுயேச்சைகளும் களமிறங்குவார்கள் என்பதாலும் இப்பொழுதே அனல் பறக்க ஆரம்பித்து விட்டது, திருச்சி மாநகராட்சி தேர்தல்.
இதையும் படிங்க:மல்லுக்கட்டுக்கு தயாராகும் மலைக்கோட்டை மாநகரம் - வாகை சூடுவார்களா வாரிசுகள்?