திருச்சி: மணிகண்டத்திலுள்ள குடிசை மாற்று வாரியத்தில் வசித்து வந்தவர், வெங்கடேஷ். இவர், நேற்று முன்தினம் (அக்.04) கேரளா மாநிலம், பாலக்காட்டில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
அவரது உடல் மணிகண்டத்திலுள்ள வீட்டுக்கு எடுத்துவரப்பட்டு, பின்பு இறுதி சடங்கிற்காக திருச்சி அரியமங்கலத்திலுள்ள சமுதாய நல்லிணக்க சுடுகாட்டிற்கு கொண்டுச் செல்லப்பட்டது.
அப்போது காசியில் பயிற்சிபெற்று, திருச்சி அரியமங்கலத்தில் ஜெய் அகோர காளி சிலையை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தி வரும் அகோரி மணிகண்டன், அவரது சிஷ்ய அகோரிகள் ஆகியோர் உடல் முழுவதும் திருநீறு பூசிக்கொண்டு மயானத்திற்கு வந்தனர்.
ஆன்ம சாந்தி பூஜை
மயானத்தில் வெங்கடேசனின் குடும்பத்தினர் செய்ய வேண்டிய இறுதிச்சடங்கை முடித்த பின்னர், வெங்கடேஷ் ஏற்கெனவே, அகோரி மணிகண்டனிடம் சிஷ்யராக இருந்ததால், அகோரி மணிகண்டன் வெங்கடேஷ் சடலத்தின் மீது அமர்ந்து மந்திரங்கள் கூறி, ஆன்ம சாந்தி பூஜை செய்தார்.
அப்போது சக அகோரிகள் டமரக மேளம் அடித்தும், சங்கு ஒலி எழுப்பியும் பூஜையில் ஈடுபட்டனர். குடும்பத்தினரின் அனுமதியோடு ஆன்ம சாந்தி பூஜை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இந்த விநோத பூஜையானது காசியில் மட்டுமே காணமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஜீவசமாதி அடைய முயன்றாரா அகோரி? ஆண்டிபட்டியில் பரபரப்பு!