திருச்சி: நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றிவந்தவர் பூமிநாதன் (56). இவர் நேற்று முந்தினம் இரவு (நவம்பர் 20) ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, ஆடு திருடும் கும்பலைத் தடுத்து நிறுத்த முயற்சித்துள்ளார். அவர்கள் தப்பிச்சென்றதை அடுத்து, பூமிநாதன் அந்தக் கும்பலைத் துரத்திச்சென்று இரண்டு நபர்களைப் பிடித்துள்ளார்.
24 மணிநேரத்தில் நடவடிக்கை
இச்சம்பவத்தின்போது, அந்தக் கும்பல் எஸ்.எஸ்.ஐ. பூமிநாதனை வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் எட்டு தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
காவலர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று நேற்று நடத்திய முதற்கட்ட விசாரணையில் சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதனை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியவர்கள் தஞ்சை மாவட்டம் கல்லணை அருகே உள்ள தோகூரைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அவர்களது செல்போன் பதிவுகளை ஆய்வுசெய்த காவலர்கள், அவர்களின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்தனர்.
இரண்டு சிறுவர்கள்
இந்நிலையில், எஸ்.எஸ்.ஐ. பூமிநாதன் கொல்லப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய 10 வயது சிறுவன், 17 வயது சிறுவன் உள்பட மொத்தம் மூவரைத் தனிப்படையினர் இன்று (நவம்பர் 22) கைதுசெய்தனர்.
இது குறித்த தீவிர விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், பூமிநாதனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணியும், அக்குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவியும் வழங்கப்படும் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Trichy SSI Murder: ரூ.1 கோடி நிதியுதவி அறிவித்த முதலமைச்சர்!