மணப்பாறை அடுத்த கீரைத்தோட்டம் பகுதியை சேர்ந்த சுப்ரமணியன் என்பவரின் 16 வயது மகள் திண்டுக்கல் ரோட்டில் உள்ள அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலை பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று (மே 31) மாலை பள்ளியில் தேர்வு முடிந்து வீடு நோக்கி நடந்து சென்ற மாணவியை திருச்சி ரயில்ரோடு மேம்பாலத்தின் அருகே இளைஞர் ஒருவர் மாணவியின் கழுத்து உள்பட பல இடங்களில் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடினார்.
இதில் ரத்த வெள்ளத்தில் ஆபத்தான நிலையில் மயங்கி விழுந்த பள்ளி மாணவியை உடனடியாக அருகிலிருந்தவர்கள் மீட்டு சிகிக்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு பொத்தமேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த பாலசுப்ரமணி என்பவரின் மகன் கேசவன் போக்சோவில் கைது செய்யபட்டதும்; சில மாதங்களுக்கு முன்பு வெளியே வந்த இளைஞர் கேசவன் மாணவியை பழிவாங்கும் நோக்கில் கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சி செய்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து தப்பி ஓடிய இளைஞரை மணப்பாறை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் நள்ளிரவில் கீழபூசாரிப்பட்டி இரயில்வே கேட் அருகில் சுமார் 500 மீட்டர் தொலைவில் இரயில் பாதையில் இளைஞர் ஒருவர் இரயிலில் அடிபட்டு கிடப்பதாக இரயில்வே காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அத்தகவலின் பேரில் நிகழ்விடத்துக்கு சென்ற இரயில்வே காவல்துறையினர் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். அதில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞரின் உடல் மணப்பாறை காவல்துறையினரால், 11 ஆம் வகுப்பு மாணவியை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடி தேடப்பட்டு வந்த கேசவன் தான் என்பது தெரியவந்தது.
கேசவனின் தந்தையை நிகழ்விடத்துக்கு வரவழைக்கப்பட்டு உறுதியும் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து கேசவனின் உடலை கைப்பற்றிய இரயில்வே காவல்துறையினர் உ்டற்கூராய்வு பரிசோதனைக்காக திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதையும் படிங்க: ரூ.97 லட்சம் மோசடி: கூட்டுறவு வங்கி பெண் மேலாளர் கைது