திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியில் செல்லம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டுவருகிறது. இந்தப் பள்ளிக்குத் திருச்சி மட்டுமின்றி, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும் மாணவ, மாணவிகள் வந்து பயில்கின்றனர். இவர்களை அழைத்து வருவதற்காகப் பள்ளி நிர்வாகம் சார்பில் பேருந்து, வேன் உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்பட்டுவருகின்றன.
அந்தவகையில் தஞ்சை மாவட்டம் மேகளத்திலிருந்து 15-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு பள்ளிப் பேருந்து இன்று காலை வந்துகொண்டிருந்தது. திருவெறும்பூர் அருகே செட்டியார்பேட்டை அருகே வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, திடீரென சாலையோரம் உள்ள வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
நாசா செல்லும் புதுக்கோட்டை அரசுப் பள்ளி மாணவி - உதவி செய்ய வாருங்கள் தோழர்களே!
இதில் பேருந்தின் இடிபாடுகளுக்குள் சிக்கிய மாணவ, மாணவிகள் அலறித் துடித்தனர். அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் ஓடிச்சென்று மாணவ மாணவிகளை மீட்டனர். இதில் எட்டு பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, பேருந்தை இயக்கிய ஓட்டுநர் தினகரன் என்பவரைப் பிடித்து விசாரணை செய்துவருகின்றனர்.
ஆந்திர பள்ளி மாணவர்களுக்கு நிகழ்ந்த கொடுமை!
இந்த விபத்தில் காயமடைந்த எட்டு மாணவர்களும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில், குறுகிய சாலையில் பள்ளிப் பேருந்து அதிவேகமாக இயக்கப்பட்டதால்தான், இவ்விபத்து நடந்திருப்பதாகத் தெரியவந்துள்ளது.
ஏற்கனவே பள்ளிப் பேருந்துகள் வேகமாக இயக்கப்படுவது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் பலமுறைக் கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.