திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த முத்தப்புடையான்பட்டியைச் சேர்ந்தவர் பூவாயி(60). இவர் கணவனை இழந்து வாழ்ந்து வரும் நிலையில் கால்நடை வளர்ப்பின் மூலம் வருமானம் ஈட்டி தன் குடும்பத்தைக் கவனித்து வருகிறார்.
இந்நிலையில், வழக்கம்போல் இன்று திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையின் பக்கவாட்டில் அமர்ந்து கால்நடை மேய்ச்சலில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் அவ்வழியாக வந்த இரு இளைஞர்கள் வாகனத்தை நிறுத்தி அதைச் சரிசெய்வது போல் நடித்து மூதாட்டியை நோட்டமிட்டுள்ளனர்.
இதையடுத்து, அருகில் யாரும் இல்லாததை உறுதிசெய்து கொண்ட இளைஞர்கள் மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த ஐந்து சவரன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் ஏறி அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.
இது குறித்து மூதாட்டி மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில், வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அடையாளம் தெரியாத நபர்களை தேடி வருகின்றனர்.
திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில், பட்டப்பகலில் நடைபெற்ற வழிப்பறி சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.