தேசிய தெய்வீக யாத்திரை என்ற பெயரில் முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், திருவாடானை சட்டப்பேரவை உறுப்பினருமான கருணாஸ், பல்வேறு மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த வகையில், திருப்பூர் மாவட்டம் வெள்ளியங்காடு நால்ரோடு பகுதிக்கு இன்று வந்த கருணாஸ், பொதுமக்களிடையே பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசியாக, துணையாக, அரசியல் ஆளுமையாக, அதிமுகவையும் ஜெயலலிதாவையும் உண்மையாக நேசித்தவர் சசிகலா. அவர் சிறையிலிருந்து விடுதலை ஆனது ஒட்டுமொத்த மக்களுக்கும் மகிழ்ச்சியான செய்தி. தற்போது வரை அதிமுகவுடன் தோழமையாகத்தான் இருக்கிறோம். வரும் தேர்தலிலும் எங்களை தோழமை என்று தீர்மானிக்க வேண்டிய இடத்தில் அதிமுக தலைமை தான் இருக்கிறது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூட்டணி கட்சிகளை அழைத்து பேசும் போது, எங்களையும் அழைத்து பேசுவார் என்ற நம்பிக்கை உள்ளது. அப்போது எங்களது கோரிக்கைகளை தெரிவிப்போம். முக்குலத்தோர் சமுதாயத்திற்கு கல்வி, வேலைவாய்ப்பில் 25% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை, முதலமைச்சர் நிச்சயம் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சசிகலா விடுதலை:சேலத்தில் அமமுகவினர் கொண்டாட்டம்!