தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியம் வாகைக்குளம் கிராமத்தில் விவசாயி அணைக்கரை முத்து என்பவரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற வனக்காவலர்கள், அவரை அடித்துக் கொன்றதாகக் கூறப்படுகிறது. அணைக்கரை முத்துவை அடித்துக்கொன்ற வனக் காவலர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய கோரியும் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு உட்படுத்த கோரியும் புதிய தமிழகம் கட்சியினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, "தமிழ்நாடு அரசு உடனடியாக அணைக்கரை முத்துவை அடித்துக் கொன்ற வனக் காவலர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும், அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும்" என கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் சாமுவேல், இளைஞர் அணி செயலாளர் குணசேகரன், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.