திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அடுத்துள்ள கணக்கம்பாளையம் ஊராட்சி, மீனாட்சி நகரில் வசித்துவந்தவர் பாலமுருகன் (31). கரூரைச் சேர்ந்த இவர், திருப்பூரில் பனியன் தொழிலாளியாகப் பணிபுரிந்துவந்தார். இவருக்கும், ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த கவிதா (21) என்பவருக்கும் கடந்த இரண்டரை வருடத்திற்கு முன்னர் பெற்றோர் திருமணம் செய்துவைத்துள்ளனர். கவிதா எட்டுமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
பாலமுருகன் சகோதரர் கார்த்திகேயன் (35). இவரும் தனது மனைவியுடன் அருகில் வசித்துவருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கார்த்திகேயன் தனது சகோதரர் பாலமுருகனுக்கு போன் செய்துள்ளார். நீண்ட நேரமாகியும் போன் எடுக்கப்படாமல் இருக்கவே சந்தேகமடைந்த கார்த்திகேயன் நேற்று பாலமுருகன் வீட்டிற்குச் சென்றுள்ளார். கதவு உள்புறமாகத் தாழிடப்பட்டிருந்தது. கார்த்திகேயன் சிறிது அழுத்தம் கொடுத்து தள்ளவே கதவு திறந்துகொண்டது.
உள்ளே சென்று பார்த்தபோது, பாலமுருகன் - கவிதா இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்துள்ளனர். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கார்த்திகேயன் பெருமாநல்லூர் காவல் துறையினருக்குத் தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உயிரிழந்த நிலையில் இருந்த கணவன்- மனைவி இருவரது உடல்களையும் கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்தை ஆய்வுசெய்த காவல் துறையினருக்கு, பாலமுருகன் - கவிதா இருவரும் கைப்பட எழுதிய கடிதம் கிடைத்துள்ளது. தங்கள் சாவுக்கு யாரும் காரணமில்லை என அக்கடிதத்தில் எழுதியிருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
கவிதாவின் தந்தை சண்முகம் (48) அளித்த புகாரின்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். திருமணமாக இரண்டரை ஆண்டுகளே ஆன காரணத்தால் ஆர்டிஓ விசாரணையும் நடைபெறும் எனத் தெரிகிறது. எட்டு மாத கர்ப்பிணி தனது கணவருடன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சிறுமியை மயக்க நிலையில் விட்டுச் சென்ற பெண்!