தமிழக தேர்தல் களம் அதிமுக, திமுக, அமமுக, மநீம, நாம் தமிழர் கட்சி என 5 முனைப் போட்டியாக உள்ளது. தேர்தல் தேதி நெருங்கி வருவதால், அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளன. அக்கட்சிகளின் தலைவர்கள் மட்டுமன்றி, தேசியக் கட்சிகளின் தலைவர்களும் தமிழகத்தையே சுற்றி சுற்றி வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா, கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, டி.ராஜா போன்றோர் மாவட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக, தாராபுரத்தில் நாளை நடைபெறும் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். பாஜக மாநிலத் தலைவர் முருகன் உள்ளிட்ட கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். அதே மேடையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனர்.
நேற்று சென்னை மற்றும் சேலத்தில் பரப்புரை மேற்கொண்ட ராகுல் காந்தி, மத்திய அரசையும், ஆர்எஸ்எஸ் அமைப்பு குறித்தும் கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில், தமிழகத்தில் நாளை மோடி பரப்புரை செய்யவிருப்பது கவனிக்கத்தக்கது. இதற்கிடையே, பிரதமர் வருகையையொட்டி தாராபுரம் உள்ளிட்டப் பகுதிகளில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பாஜக அதிகாரத்துக்கு வந்தால் புதுச்சேரியை நகராட்சி ஆக்கிவிடுவார்கள் - திருச்சி சிவா பேச்சு