திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள கொழுமம் குளத்துப்பாளையம் பகுதியில் கோதையம்மன் குளம் அமைந்துள்ளது. இந்த குளம் சுற்றுவட்டார பகுதிகளான, கொழுமம் மயிலாபுரம், ஐய்யம்பாளையம் உட்பட பல்வேறு கிராமங்களின் குடிநீர் ஆதாரமாகவும் 550 ஏக்கர் நிலங்களின் பாசன வசதிக்கும் பயன்படுத்தபட்டு வருகிறது.
கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை பெய்யாத காரணத்தால் குளம் வறண்டு விவசாயிகள், பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளனார்கள். தற்போது பருவமழை தீவிரமாக பெய்து வருவதால் குளத்தின் முக்கிய நீர் ஆதாரமான குதிரையாறு அணை நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டுள்ளது.
இதனால் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு குளம் தன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் நீரை வரவேற்று கிடா வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.