திருப்பூர் கோல்டன் நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். கடந்த 4 வருடங்களுக்கு முன்பு சுரேஷின் மனைவி திவ்யா உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், தனது ஏழு வயது மகன் சஞ்சய் உடனிருந்த சுரேஷ், திருப்பூர் எம்ஜிஆர் காலனியில் உள்ள அப்துல்காதர் என்பவரின் பனியன் கம்பெனியில் பணியாற்றி வந்தார்.
இதனிடையே அந்த நிறுவனத்தில் பணியாற்றும் சாகுல் ஹமீது என்பவரிடமிருந்து அவசரத் தேவைக்காக ஒன்றரை சவரன் தங்க நகை வாங்கியதோடு, சாகுல் உதவியுடன் அப்பகுதியில் நிதி நிறுவனம் நடத்திவரும் நாகராஜ் என்பவரிடம் இருந்து பத்தாயிரம் ரூபாயையும் பெற்றுள்ளார்.
இந்நிலையில் பணம் மற்றும் நகையை கொடுத்து இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகியும், சுரேஷ் வாங்கிய பணத்தையும் நகையையும் கொடுக்காமல் இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த நாகராஜ், அப்துல் காதர், சாகுல் ஹமீது, சேட் ருபைதீன் ஆகிய நான்கு பேரும் கடந்த ஒன்றாம் தேதி சுரேஷை எம்ஜிஆர் காலனி பகுதிக்கு வரவழைத்து நடு ரோட்டில் வைத்து இரும்புக் கம்பி மற்றும் உருட்டு கட்டையை கொண்டு சரமாரியாக அடித்து விட்டு தப்பி சென்றுள்ளனர்.
இதில் பலத்த காயமடைந்த சுரேஷை அப்பகுதியினர் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
இதனிடையே கொலை குற்றவாளிகள் நான்கு பேரையும வடக்கு காவலர்கள் தேடி வந்தனர். கடந்த மூன்றாம் தேதி திருப்பூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் வைத்து சாகுல் ஹமீதை போலீசார் கைது செய்தனர்.
கடந்த 10ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நீதிமன்றத்தில் நாகராஜ் மற்றும் அப்துல் காதர் ஆகிய இருவரும் சரணடைந்த நிலையில், திருப்பூர் கூலிபாளையம் பகுதியில் வைத்து சேட் ருபைதீன் என்பவரை காவலர்கள் இன்று கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சேட் ருபைதீனிடம் காவலர்கள் நடத்திய விசாரணையில், ஏற்கனவே திட்டம் தீட்டியபடி சுரேஷை எம்ஜிஆர் காலனி பகுதிக்கு வரவழைத்து அடித்துக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.
இந்த நிலையில் சேட் ருபைதீனிடமிருந்து ஏராளமான போலி பத்திரிகையாளர் அடையாள அட்டைகளை காவலர்கள் பறிமுதல் செய்தனர். அவரை நீதிபதி முன் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர்.